டேவிட்.டி.பக்: படைப்பின் மீதான காதலன்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் என்பது குறள். குறள் குறித்த பெருமிதம் என்பது வேறு தமிழர்கள் அதைப் படிப்பது அல்லது பின்பற்றுவது என்பது வேறு. ஆனால் இங்கே கூறப்பட்ட குறளின் வரி மிகவும் சிறப்பானது. அன்பை யாராலும் அடைக்கமுடியாது அதற்கான தாழ்ப்பாள்களை இதுவரை யாரும் உருவாக்கவில்லை. அப்படிப்பட்ட அன்பின் இருப்பிடமாகத்தான் வந்தார் திரு. டேவிட்.டி.பக் அவர்கள். டேவிட் அமெரிக்காவின் கெண்டிகா பகுதியைச் சார்ந்தவர். அவரின் பெற்றோர் இந்தியாவில் ஒருகாலத்தில் தமிழகத்தில் வசித்து வந்ததால் தமிழோடு அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பின் அவர்கள் அமெரிக்காவுக்கே திரும்ப சென்றுவிட்டார்கள். ஆனால் தமிழை மறக்க முடியாத தீராத அன்புகொண்ட டேவிட் எழுபதுகளில் மீண்டும் தமிழகம் வந்திருக்கின்றார். மதுரையில் ஈராண்டுகள் தங்கி அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கிலம் சொல்லித்தந்துள்ளார். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த அதே வேளையில் தமிழையும் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டுள்ளார்.

தமிழின் மேல் மிக்க பற்றுடையவராகத் தன்னை மாற்றிக்கொண்ட டேவிட் தமிழ் இலக்கியங்களைத் தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தைத் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றார்.தமிழின் முக்கிய இலக்கியங்கள் பலவற்றை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்துள்ளார் டேவிட். அதில் மிகவும் முக்கியமானது குற்றாலக் குறவஞ்சி.

ஒருமுறை டொராண்டாவில் நடைபெற்ற தமிழ் மாநாட்டில் பாண்டிச்சேரி பிரஞ்ச் நிறுவனத்தின் கண்ணன் அவர்களைச் சந்தித்த டேவிட் தலித் இலக்கியம் எனது அனுபவம் என்னும் நூல் ஒன்றைத் தர அவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகி இருக்கலாம். தலித் இலக்கியம் எனது அனுபவம் என்னும் நூல் தமிழில் மிகமுக்கியமான நூல் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் ஒரு படைப்பாளி தன் அனுபவங்களைப் பற்றி கூறி அவரின் படைப்புகளில் சிலவற்றை சேர்த்து தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதில் இருந்த எல்லா படைப்பாளிகளையும் சந்திப்பதற்காக அவர் சென்னை வந்திருந்தார். தலித்முரசு ஆசிரியர் திரு.புனித பாண்டியன், முற்றுகை ஆசிரியர் திரு.யாக்கன் ஆகியோரைச் சென்னையில் சந்தித்துப் பேசிவிட்டு பிறகு என்னைப் பார்க்க ஆம்பூருக்கு வந்திருந்தார்.

06.09.09 ஞாயிறு அன்று காலை பிருந்தாவன் விரைவு தொடர்வண்டியில் வந்தார். மிகவும் எளிமையாக இருந்தார். நம்முடைய சூழ்நிலையை அப்படியே தனதாக்கிக் கொள்ளக்கூடியவராக இருந்தார். அறுபதைக் கடந்தவர்.ஆனால் மிகவும் சுறுசுறுப்பானவர். என்னுடைய இருசக்கர வாகனத்தில் ஆம்பூரைச் சுற்றிக்காட்டினேன். பிறகு கஸ்பாவிற்கு வந்தோம். கொஞ்ச நேரம் தூங்கினார். பிறகு என்னுடைய பெற்றோர்களுடன் உரையாடிக்கொண்டிருந்துவிட்டு என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார். பதில் சொன்னேன். எங்கள் தெருவில் அப்போது சிறுவர்களும் பெரியவர்களும் தாயம் விளையாடிக்கொண்டிருந்தனர். அதில் அவரும் கலந்துகொண்டார்.தெருவில் அமைர்ந்து அவர் பிள்ளைகளோடு தாயம் விளையாடியது எங்கள் தெரு மக்களுக்கு ஒரே வியப்பு. கூடுதலாக என்னவென்றால் அவர் பேசிய தமிழ்.அது அவர்களுக்கு மிகவும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

பிறகு மீண்டும் ஆம்பூரை சுற்றினோம். எங்கள் தலித் பகுதியின் நாட்டாண்மை திரு.வெங்கடேசனை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தேன்.

‘இவர் எங்கள் சேரியின் தலைவர்’

’ஓ.. அப்படியா! வணக்கம்’ என்று கைகொடுத்தார் டேவிட்.

’ஐ யாம் ப்ரெசிடெண்ட்’ என்று சத்தமாக ஆங்கிலத்தில் கூறினார் எங்களூர் தலைவர்.

உடனே டேவிட் ’நாட்டாமை’ என்று சொன்னார். ஒரு நிமிடம் உறைந்த்ப் போனார் எங்களாவர்.

அடுத்து ஒரு பிரியாணி கடைக்குப் போய் மாட்டிறைச்சி பிரியாணி ருசி பார்க்கலாம் என்றேன். ஒரு பிளேட் வாங்கி கொஞ்சம் சாப்பிட்டார். அதன் ருசி மிகவும் அருமையாக இருந்தது என்று அவர் சொன்னார். முழுமையாக சாப்பிட்டு இருக்கலாம் ஆனால் அழகியபெரியவனின் வீட்டில் மதிய உணவு சாப்பிடுவது என்று திட்டம். அதனால் நல்ல பிரியாணியையும் விட்டுவிட்டு வந்துவிட்டோம்.

பிறகு நேராக அழகிய பெரியவனின் வீட்டிற்குச் சென்று அங்கு அவருடன் உரையாடிவிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு பின் சாப்பிட்டோம். அழகிய பெரியவனின் துணைவியார் மிகச்சிறப்போடு அன்புகலந்து சமைத்திருந்தார். மிக அருமையான சாப்பாடு. அங்கிருந்து பாலூர் என்னும் தலித் கிராமத்திற்குச் சென்றோம். அந்த கிராமத்தை மையமாக வைத்து அழகிய பெரியவன் கதை ஒன்று எழுதியிருந்தார். அந்த கிராமத்தைப் பார்த்துவிட்டு அங்கு கூடியிருந்த இளைஞர்களுடன் உரையாடிவிட்டு திரும்பினோம். வழியெல்லாம் பேசிக்கொண்டே வந்தோம். ஆம்பூரில் அய்ந்து மணிக்கு பிருந்தாவன் பிடித்தால் சீக்கிரம் வந்துவிடலாம் என்று நினைத்து வேகமாக வந்து டிக்கெட் வாங்கினோம். ஒரு மணிநேரம் மிகவும் தாமதமாக வந்தது அந்தத் தொடர்வண்டி. ஆம்பூர் ரயில் நிலையத்தில் அமர்ந்துக் கொண்டு பேசினோம். அவர் தலித் இலக்கியம் எனது அனுபவம் என்னும் புத்தகத்தை மொழிபெயர்க்கப் போவதையும்  அதற்காக அவர் பெங்குவின் நிறுவனத்தை அணுக இருப்பதையும் கூறினார். ஆம்பூர் மிகவும் பிடித்துப் போய்விட்டதாகவும் கூறினார். வானத்தில் மேகம் சூழ்ந்தது. மழை தூறியது. டேவிட் தன் பையில் குடை வைத்திருந்தார். மழைக்குப் பிடித்துகொண்டார். எனக்கு மழையில் நனைவது பிடிக்கும் என்றேன். தனக்குப் பிடிக்காது என்றார். தொடர்வண்டி வந்தது. அன்போடு விடை கொடுத்தேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: