திசநாயகா

தீர்மானமானதாக இருக்கின்றது எல்லாம்
உண்மையின் மெய்பிம்பங்களை மறைக்கும்
மாயபிம்பங்களின் தோற்றங்கள் உட்பட
யாருக்கும் தெரியாமல் கொல்லும் தந்திரமும்
எல்லாவற்றையும் சூறையாடும் குற்றங்களும்
வெளிச்சத்திற்கு வருதல் சாத்தியமாகும்
உண்மையின் சொரூபத்தைத்
தோலுரித்து
ஒரு பழத்தைப் போல தருதல்
அதிகாரத்தின் தொண்டையில் முள் ஏற்றுதல்
கத்தும் அதன் வலிமையில்
ஒரு வதை என்பதோ
ஒரு வலி என்பதோ
ஒரு கைது என்பதோ
ஓர் உயிர் என்பதோ
நீதியின் அழிவு என்பதோ
எதுவுமற்று
முன்பே தீர்த்த தீர்ப்பின் கொழுந்துகளில்
எரியும் இருபது ஆண்டுகளின்
திசைகளில்
புதைக்கப்படுகின்றன உண்மையின் வாய்கள்
அவை
தமிழென்றாலும்
சிங்களமென்றாலும்