நீக்கப் படாத அவை குறிப்புகளும் ஆதவனின் குறைந்த ஒளியும்

யாழன் ஆதி

துரையில் நடந்த கடவு கூட்டத்தில் தமிழ்நதிக்கும் ஆதவன் தீட்சண்யாவிற்கும் நடந்த உரையாடலை வாசித்து முடித்தபின் மிகவும் அயர்ச்சி அடைந்தேன். ஆதவனின் பேச்சும் அவரின் பதில் கடிதமும் அவரின் மதிப்பை (இதற்கு கூட ஆதவனால் பகடியாக ஏதாவது கூறமுடியும். எ.கா. உம் மதிப்பு ஒண்ணும் மசுர வளர்க்காது) வெகுவாக குறைக்கிறது என்றே சொல்லவேண்டும். உத்தபுர சுவர் விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எடுத்த செயல்பாடுகளை எழுத்தில் வடித்து தமிழகத்தில் சாதி ஒழிக்க வந்த ஒரே இயக்கம் அதுதான் என்பதற்காக தலித் முரசு போன்ற இதழ்களையெல்லாம் கூட அவர் விடவில்லை என்பது மிக முக்கியம். தன் கட்சிக்கு இவ்வளவு விசேஷமாய் அவர் உண்மையாக இருந்தார். ஆனால் அவரின் கட்சி உத்தபுர சுவரை சுட்டுத்தள்ளுவேன் என்று சூளுரைத்த?! ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து மதுரை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இருகைகளையும் கட்டிக்கொண்டு மேடையில் சிலையாட்டம் நிற்க வைக்கப்பட்ட மோகன் குறித்தெல்லாம் அவரால் பகடி செய்யமுடியவில்லை. அந்த அம்மா வேறு எப்படியாவது ஈழத்தை வாங்கித்தந்து விடுவேன் ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கும்போதும் பேசாமல் பேன் பார்க்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தார்.

அவரைப்போல அதிரடியாக நையாண்டி பேச நமக்கு வராது. ஆனால் எத்தனையோ ஆண்டுகளாக விடுதலைக்காகப் போராடும் மக்களை இவ்வளவு இழிவுப் படுத்தவேண்டும் என்னும் எண்ணம் எப்படி அவருக்கு வந்தது என்று தெரியவில்லை. வால்பாறைக் கூட்டத்தில் யவனிகாவின் தொகுப்பைப் பற்றி பேசிய மதிவண்ணன் சர்வதேச ஒடுக்குமுறை குறித்தெல்லாம் எழுதுபவர்கள்  தங்களை சுற்றியிருக்கும் சாதி பிரச்சனைப் பற்றி எழுத வேண்டாமா என்று கேட்ட கேள்விக்கும் படுகொலைச் செய்யப்படும் தமிழரைக் காக்க பெரும் எழுத்தாளர்களாகிய நீங்கள் எல்லாம் எழுதக் கூடாதா என்று தமிழ்நதி கேட்டதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றுதான் நான் சொல்லுவேன். மதிவண்ணனின் கேள்விக்கு எதிர்கேள்வியாக நீங்கள் கங்காணிகளைப் பற்றி எழுதியிருக்கின்றீர்களா என்று மற்றவர்கள் கேட்டதையொத்துதான் பதில் அளித்து இருக்கின்றார் ஆதவன். தேசியத்திற்குள் ஒன்றுபட்டு இருக்கும் அவரின் மார்க்கிசியமே அவரை இப்படி பேசவைத்திருக்கின்றது என்ற உறுதியான நம்பிக்கையினை நாம் பரப்பலாம்.

தமிழ்நாட்டிலிருந்துப் போன தமிழர்களை அங்கிருந்த பூர்வீகத்தமிழர்கள் எப்படி நடத்தினார்கள்? திண்ணியத்திலே பீ தின்ன வைக்கப்பட்ட போது எங்கே போனீர்கள்? அதற்கு இப்போது பதிலைச் சொல்லுங்கள் இல்லையென்றால் ஒன்றுபட்ட இலங்கையில் வாழுங்கள் முடிந்தால் ராஜபக்சேவுடன் கூட்டணி வைத்து உங்களுக்கு இலங்கையில் மார்க்சிஸ்டு கட்சி ஆட்சிக்கு வந்தால் கடலை மிட்டாய் வாங்கித்தருகிறோம் என்பார். தன்னுடைய தலித் அரசியலையே தன் எழுத்தில் போல கட்சியில் பேச முடியாமல் தவிக்கும் ஆதவனுக்கு அடுத்த தேர்தலில் ஓசூரில் நிற்க அதிமுக கூட்டணியில் வாய்ப்பு கிடைக்கலாம் அல்லவா?

சில விளக்கங்களைப் பெற விழைவதில் தவறேதும் இருக்காது என்றே நினைக்கின்றேன். இந்திய விடுதலைப் போர் நடைபெற்றபோது சாதி அற்றுப் போயா இது இருந்தது. அப்போது பொதுவுடைவாதிகள் இங்கு இல்லையா? அவர்கள் அப்போது தலித்துகளுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்துப் போராடிக் கொண்டிருந்த புரட்சியாளர் அம்பேத்கருக்கு எவ்விதத்தில் உறுதுணையாக இருந்தார்கள். தலித்துகளைக் கொடுமைப்படுத்திய பார்ப்பன பனியாக்கள் கைகளிலும் இந்துத்துவ வாதிகளிடத்திலும் இந்திய சுதந்திரம் தரப்பட்டபோது இவர்களுடன் இருக்க முடியாது தலித்துகளுக்கு தனிநாடு கொடுங்கள் என்று கேட்ட அம்பேத்கருக்கு ஆதரவாக அன்றைய பொதுவுடைமைவாதிகள் இருந்தார்களா? இன்னும் தீர்க்கப்படாத கொடுங்கனவாக இருக்கின்ற சாதிப் பிரச்சனைகளை ஒழிக்க இப்போது மிகவும் வளர்ந்துள்ள ஆதவனின் கட்சி என்ன நடவடிக்கை எடுக்கின்றது என்பதை அவர் கூறாமல் ஈழப்போரில் தங்கள் வாழ்வைக் கொடுத்துப் போராடும் போராளிகளை குறை கூறாமல் இருக்கவேண்டும்.

இன்றைக்குப் புலிகள் அழிக்கப்பட்டார்கள். வதைமுகாம்களாக மாறிப் போயிருக்கும் இலங்கை அரச முகாம்களில் தத்தளிக்கும் தமிழினத்தின் மக்களை எப்படி மீட்பது என்று சிந்திப்பது யார்? அவர்களுக்கான அரசியல் சார்ந்த உரிமைகளைப் பேசுவது யார்? ராஜபக்சேவும் அவருடைய அரசும் என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்துக் கொண்டுதான் இருக்கின்றது. தலித் பார்வையில் ஈழப்பிரச்சினையை அணுகவேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. அதே பார்வையில் ஆதவன் குடியிருக்கும் கோயிலான அவருடைய கட்சியைப் பார்க்கவேண்டும் என்றுதான் நாம் கேட்கிறோம். அதுதான் அவருடைய வார்த்தைகளுக்கான நியாய்த்தைப் பெற்றுத்தரும்.

ஈழப்பிரச்சினையையும் இங்குள்ள சாதித்தமிழரின் போக்கையும் நாம் முடிச்சிப் போடமுடியுமா என்ன? இங்குள்ளவர்கள் ஈழப்பிரச்சினைய அரசியலின் பகடைக்காயாக மட்டுமே பார்க்கிறார்கள் என்பது ஆதவன் போன்ற அறிவுசாலிகளுக்கு தெரியாதா என்ன?

ஈழத்தில் சாதி இல்லை என்று யாரும் சொல்லவில்லை. தலித் படைப்புகளைத் தந்த டேனியேலின் படைப்புகள் நமக்கு சொல்கின்றன எல்லாவற்றையும். ஆனால் அறுபது ஆண்டுகால பிரச்சனையினை அல்லது விடுதலைப் போரை எப்படி நம்மால் புறந்தள்ள முடியும். இந்திய விடுதலைக்கு தலித்துகள் பங்காற்றவில்லை என்று இப்போது இங்கே சிலபேர் கூப்பாடு போடுகிறார்களே அதுபோல் ஆகிவிடாதா? சரி புலிகள் அற்ற தமிழர்கள் இப்போது சிங்கள உழைக்கும் மக்களோடு இயைந்து வாழ்ந்திட இயலுமோ? அதற்கு ஆவணவற்றை ஆதவன் செய்வாரா? எங்கள் ஊர்ப்பக்கம் இருக்கும் எம்.எல்.ஏ ஞானசேகரனை தோற்கடித்து விடுவார் போலிருக்கின்றது ஆதவன்.

ஆதவன் மேலும் அவருடைய எழுத்துக்கள் மீதும் மாறாத பற்றும் நம்பிக்கையும் நாம் வைத்திருக்கின்றோம். அது தகர்ந்து போகும் அளவுக்கு சில நேரங்களில் அவருடைய செயல்கள் அமைந்துவிடுகின்றன. ஈழத்தமிழர் இப்படி கொல்லப்படுகின்றனரே என்று கேட்டால் அவர்களிடம் இருக்கும் சாதியைப் பற்றி ஏன் நீங்கள் கவலைப்படவில்லை என்கிறார். இது அவரின் பார்வை. அப்படி அவர் பேசியிருந்தால் நாம் எந்த விதமான கருத்தினையும் சொல்லல்  ஆகாது. ஆனால் அவர் தலித் பார்வை என்று அதை கட்டமைக்கின்றபோது ஒட்டுமொத்த தலித்துகளின் நிலையா அது என்பது கேள்வியாக இருக்கின்றது. இத்தகைய கொடும் படுகொலையினைச் செய்த ராஜபக்சேவை அவர் ஒரு வார்த்தைகூட அவர் விமரிசிக்கவில்லை. அதற்குத் துணைபோன இந்தியாவின் சதியினை அவர் பேசவில்லை. பொதுமக்கள் கொல்லப்படுவது குறித்து தன் ஆக்கங்களை வேண்டாம் ஒரு பேச்சாகக்கூட அவர் பிரசுரிக்கவில்லை. ஆனால் புலிகளைத் திட்டுவதும் அவர்களின் அரசியலை விமரிசிப்பதும் தன்னுடைய முழுமுதல் கடமையாகக் கொண்டிருக்கின்றார். ஈழத்தில் இருக்கும் சாதிய படிநிலையை வைத்துக் கொண்டுப் பார்த்தாலுமே யார் இப்போது ஈழத்தில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்றார்கள்? இலங்கை அரசு நடத்தும் முகாம்களில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பவர்கள் யார்? யாரெல்லாம் தன்னுடைய மண்ணைவிட்டு வரமுடியாத சூழலில் இருக்கின்றார்களோ அல்லது அகதிகளாக உலகநாடுகளில் அலையாமல் தன் மண்ணிலேயே இருந்து கடைசிவரை பார்த்துவிடுவது என்று நினைக்கும் விளிம்பு நிலை மக்கள்தானே? அவர்களை கொத்தணி குண்டுகளையும் வேதி குண்டுகளையும் போட்டு கொன்ற கொடுமையைப் பேசமுடியவில்லை என்றால் தலித் விடுதலையினை மட்டும் எதை வைத்துப் பேசுவது என்பது நமக்கு சரியாக விளங்கவில்லை.

சாதியையும் அதன் வேரான இந்து மத்த்தையும் எதிர்க்காமல் புரட்சிபேசும் அவருடைய கட்சி சாதி மலிந்துப் போய் கிடக்கும் இந்தியாவில்தான் நடக்கின்றது. பாட்டாளி வர்க்கபுரட்சியையும் உழைக்கும் மக்களின் ஆட்சியையும் கொண்டுவருவது ஆகாது. கட்சியின் முக்கிய வேலை திட்டமாகவே சாதி ஒழிப்பை நிகழ்த்திவிட்டு அப்புறம் வர்க்க புரட்சியை வைத்துக் கொள்ளலாம் என ஆதவன் அங்கு பேசமுடியுமோ என்றால் கண்டிப்பாக முடியாது. ஏனென்றால் சாதி ஒழிப்பு என்னும் ஒன்றும் வேலைதிட்டங்களில் ஒன்று.

ஈழத்திலும் அதைவைத்து தானே பார்க்க வேண்டும். விடுதலைப் புலிகளின் இயக்கத்தில்கூட எத்தனையோ தலித்துகள் உயர் பதவிகளில் இருந்திருக்கின்றனர். அதை வழிநடத்தி இருக்கின்றனர். புலிகளின் அரசியல் தவறு என்றால் உலகத்திலிருக்கும் இத்தனை கோடி தமிழர்கள் அதை எப்படி ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்களின் சித்தாந்தங்களில் அதை நடைமுறை படுத்துவதில் சிக்கல்கள் அல்லது தவறுகள் இருந்திருக்கலாம். ஆனால் அதற்காக ஒரு விடுதலை இயக்கத்தையோ அல்லது அது போராடும் தேசிய விடுதலையினையோ சாதியின் பேரால் கொச்சைப் படுத்துதல் ஆகாது. அது தலித் பார்வை இல்லை. ஒடுக்கப்படுகின்ற மக்கள் யாராக இருந்தாலும் அவர்களின் விடுதலைக்காக பேசுவதே தலித்தியம். அது விடுதலைக்கான கருத்தியல்.

புரட்சியாளர் அம்பேதகர் கருதுவதைப் போல தலித் விடுதலை என்பது பிற்படுத்தப்பட்டவரின் ஒத்துழைப்பையும் சார்ந்த ஒன்றுதான். தலித் பிற்படுத்தப் பட்டவரின் ஒற்றுமையை அவர் விரும்பியதைப் போல ஈழத்தமிழர்களின் விடுதலையும் சாதி கடந்துதான் வரும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. சாதியம் அது சார்ந்த பிரச்சினைகளயும்விட வாழ்தல் என்பதுவும் அதைவிட விடுதலை என்பதும் மிக முக்கியம்.

இன்றைய சூழலில் தமிழர்களின் நிலை என்ன? அங்கே நிலவும் சாதி இப்போது அதாவது புலிகள் அல்லாத தமிழீழத்தில் எப்படி சாத்தியமாகும். கோட்பாட்டளவிலே இங்கேயே இருந்துக்கொண்டு நாம் வாய்பேசுவதைவிட அல்லது நாட்டை விட்டு வெளியேறி சுகமாக அயல்நாடுகளில் வாழ்வோரைவிட ஈழத்திலே கிடந்து அழிந்துக் கொண்டிருக்கும் அவர்கள் தான் பேசவேண்டும். பின் இவர்கள் பேசி என்ன ஆகப்போகிறது?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: