அ.முத்துகிருஷ்ணன் வருகை

area

எழுத்தாளர் அ. முத்துகிருஷ்ணன் ஆம்பூர் வந்திருந்தார். வீட்டிலிருந்து புறப்பட்டு பதினெட்டு நாட்கள் ஆகியிருந்தன அவருக்கு. புதுடில்லிக்குப் போய் அங்கு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கில் கலந்துக்கொண்டுவிட்டு திரும்பும் வழியில் நாக்பூர் சென்று அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்து பிறகு சென்னை வந்திருக்கிறார். சென்னையில் இருந்து என்னோடு கைப்பேசியில் தொடர்புக்கொண்டு ஆம்பூர் வருவதாக சொன்னவுடன் மகிழ்ச்சியாக இருந்த்து. அவர் வருவதாக சொன்ன அந்த நாளில் தான் ராணிப்பேட்டையில் பிரளயனுடைய  பாரியின் படுகளம் நாடகம் நட்த்தப்படுவதாக அந்த நிகழ்ச்சியை நடத்தும் பெல் தொழிற்சாலையில் பணியாற்றும் கலைஞர் முகில் அவர்களால் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.அந்த நாடகத்தை பார்த்துவிட வேண்டும் என்னும் ஆர்வம் அழைப்புவந்த நாளிலிருந்த இருந்தது. இதில் இன்னொரு செய்தி என்னவென்றால் அந்த நாடகத்தைப் பார்க்கத்தான் டில்லியிலிருந்தே முத்துக்கிருஷ்ணன் சென்னை வந்த்தையும் அந்நாடகத்தினைப் பார்த்த்தும். நாடகம் சிறப்பாக வந்திருப்பதாக முத்துக்கிருஷ்ணன் சொன்னதும் இன்னும் ஆர்வம் கூடியது. ராணிப்பேட்டையில்தான் என் தங்கை இருக்கிறார். அப்படியே அவர்களையும் பார்த்ததுபோல இருக்கும் என்றும் திட்டம் இருந்தது. கவிஞர் சுகிர்தராணியும் அங்கேயே இருப்பதால் அவர்களையும் பார்த்த மாதிரி இருக்கும் என்று திட்டம் விரிவடைந்துக் கொண்டே இருந்த்து. அன்று தான் முத்து வருவாதகவும், காலை பிருந்தாவன் விரைவு வண்டியில் 9.00 மணிக்கு ஆம்பூர் வந்துவிட்டால் அவரை ரயிலடியிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்று ஓய்வெடுக்க வைத்துவிட்டு பத்தாம் வகுப்பு அரசுத்தேர்வினை பார்வையிட்டுவிட்டு மீண்டும் நண்பகலில் வந்துவிடுவதாக திட்டம் போட்டோம்.

அன்று இரவே தோழர் விஜய ராஜனுக்கும் சொல்லியாகிவிட்ட்து. அவருக்கு வேலை ஒரு மனிக்கு என்பதால் காலையில் முத்துவுடன் இருக்கவேண்டும் என்றும் சொன்னேன். வழக்கறிஞரும் எழுத்தாளருமான முஷ்தாக் அவர்களின் கடைக்கு அழைத்துச் சென்று உரையாடிக் கொண்டிருக்கலாம் என்றும் பேசிவைத்திருந்தோம்.

சொன்னபடியே எல்லாம் நடந்தது.முத்துகிருஷ்ணன் வந்திருந்தார். ஆனால் என்னால் அவரோடு இருக்க முடியவில்லை. தேர்வு வேலை இருந்தது. ஒரு மணிக்கு தேர்வு முடிந்தவுடன் அவருடன் இருந்தோம். நல்ல பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்டோம். பிறகு ஆம்பூரை பேசிக்கொண்டே சுற்றிக்  கொண்டிருந்தோம். அவருக்குத் தேவையான காலணிகளை வாங்கிக்கொண்டார். மீண்டும் மாலை 5.00 மணிக்கு அவரை பிருந்தாவனத்தில் ஏற்றிவிட்டேன். முத்துகிருஷ்ணன் குறைந்த காலத்தில் எனக்கு நண்பனான மாதிரிதான் எழுத்தாளன் ஆனதும். அவருடைய பரந்துபட்ட வாசிப்பு அனுபவமும் பயணமும் அவரை அந்த் நிலைக்கு உயர்த்திருந்தன. இத்தனைக்கும் தமிழே படிக்கவில்லை என்கிறார். அவரின் எழுத்துகள் அவரின் இந்தக் கூற்றை பொய்யாக்குகின்றன. ஒளிராத இந்தியா மலத்தில் தோய்ந்த மானுடம் மற்றும் அவருடைய மொழிபெயர்ப்புகள் அனைத்தும் பெருமதவாதத்திற்கு எதிரான கருத்துக் கலகங்கள். அவருடனான சந்திப்பு எழுதத்தூண்டும் ஒன்று.