ஏதோ நடிகர் சிலம்பரசனைப் பற்றி என்று கருத வேண்டாம். அய்ம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் குறித்து பேசவேண்டி இருக்கிறது. ஏனென்றால் அது எழுதப்பட்ட காலத்தில் அப்படி ஒரு காப்பியம் உலகில் வேறு எந்த மொழியிலேயும் எழுதப்படவில்லை. இலியட் போன்ற காப்பியங்கள் இருந்திருக்கலாம். ஆனால் அவை மன்னர்களைப் பற்றியும் போரை முன்வைத்தும் இருக்கும். ஆனால் சாதாரண ஒரு குடும்பத்தலைவனையும் தலைவியையும் கதைத்தலைமையாக வைத்து எழுதப்பட்ட காப்பியம். தமிழ் மக்களின் பண்டைய பண்பாடு கலைகளில் அவர்களின் ஈடுபாடு ஆகியவற்றை நம்மால் நன்கு உணரமுடியும்.
நான் அதைபற்றி இங்கே கதைக்க வரவில்லை. சிலம்பு எழுதப்படுவதற்கு மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன
1. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
2.உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
3. ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்
பின் கூறப்பட்டுள்ள இரண்டும் தனிமனித வாழ்வு சம்மந்தப்பட்டவை. ஒருவர் எப்படி வாழவேண்டும் என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும்.அவரின் பண்பு நலன்,உடல்நலன் சார்ந்தது அது.அல்லது தேவையை சார்ந்தது.
ஆனால் முதலில் கூறப்பட்ட கருத்து சமூகம் சார்ந்தது. சமூகத்தின் இயல்பு என்பது பிழை செய்யக் கூடாததாக பிழை செய்யக்கூடியவர்கள் சமூகத்தலைமை ஏற்கக்கூடாதவர்களாக இருக்கவேண்டும். அரசியல் என்பதை நவீன யுகத்தில் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளலாம். அதையும் தாண்டி அது சமூகத்தை ஆள்பதாக வழிநடத்தக் கூடியதாக முன்னிகழ்வுகளை நிகழ்த்த தக்கதாக இருக்கும் காரணத்தால் அரசியல் பிழை நேராமல் இருத்தல் என்பது சமூகக் கடமையாக கருத்தப்பட்ட பண்பாட்டு பயன்பாடு மிக்கதாக ஒரு சமூகம் இருக்க வேண்டும் என்பதன் உயர்ந்த எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்ற எத்தனிப்பு தமிழ் சமுகத்திற்கு இருந்திருக்க வேண்டும்.
ஆனால் இப்போது பாருங்கள் அரசியல் என்பதே பிழை செய்யும் இடமாக அல்லவா இருக்கின்றது. அதுமட்டுமல்ல செய்யப்படுகின்ற பிழைகள் அத்தனையும் அரசியலையே மையமாக வைத்தல்லவா செயல்படுகின்றது. எல்லாம் ஓட்டுக்காக தேர்தலுக்காக என்றே சொல்லபடுகின்றது. தேர்தல் என்பது தவறில்லாமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்னும் போது இந்த ஜனநாயகம் எதை நமக்கு தருகிறது என்பதை நாம் உற்று நோக்கவேண்டும்
Filed under: Uncategorized |
Leave a Reply